November 22, 2013

தருண் தேஜ்பாலும் தெஹல்காவும்


1.  தருண் தேஜ்பாலை என்ன செய்யலாம்?
தருண் தேஜ்பால் யார், அவர் எப்படிப்பட்டவர், அவர் எழுத்து எத்தகையது, அவர் படைப்புகளின் உன்னதத்தன்மை யாது, அவர் இதுவரை பத்திரிகை உலகுக்கும் சமூகத்துக்கும் செய்தது என்னென்ன, போன்ற அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, துணிச்சலாக ஒரு விஷயத்தை எந்தவிதத் தயக்கமும் இன்றி சொல்லமுடியும். தருண் தேஜ்பால்மீது உடனடியாக சட்டப்படியான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். தவறு இழைத்திருப்பின் அவர் தண்டனை பெற்றாகவேண்டும். அது சட்டப்படியான தண்டனையாக இருக்கவேண்டும்.

2.  நாம் கண்டிக்கவேண்டியது தருண் தேஜ்பாலையா அல்லது தெஹல்காவையா?

சட்டப்படி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அலுவலகத்திலும் Anti Sexual Harassment Cell இருக்கவேண்டியது அவசியம். தன்னிடம் வந்து சேரும் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கவேண்டும். தெஹல்காவின் மேனேஜிங் எடிட்டர் ஷோமா சவுத்ரிக்கு தருண் தேஜ்பால் பற்றிய புகார் எப்போது போய் சேர்ந்தது? அதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? எப்போது? இடையில் காலதாமதம் ஏன் ஏற்பட்டது? இந்த விவகாரத்தை ஏன் உடனடியாகக் காவல் நிலையத்துக்கு அவர் எடுத்துச் செல்லவில்லை? இந்தக் கேள்விகளுக்கு ஷோமா சவுத்ரியிடம் இருந்து ஏற்கத்தக்க பதில்கள் வரும்வரை தெஹல்காவையும் சேர்த்தேதான் நாம் கேள்வி கேட்கவேண்டியிருக்கும். தருண் தேஜ்பாலைக் காப்பாற்றும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கும் இடமிருக்கிறது.

3.  தருண் தேஜ்பாலின் பதிலைப் பெறுவது அவசியமா?

ஆம். நடந்த சம்பவம் குறித்து தருண் தேஜ்பாலிடம் நிச்சயம் ஒரு விளக்கம் இருக்கவே செய்யும். ஆனால் அது சரியானதா, நம்பத்தக்கதா என்பது விசாரணையில் கண்டறியப்படவேண்டிய உண்மை. மன்னிப்பு, பொறுப்பில் இருந்து தாற்காலிக விலகல் என்று தருண் தேஜ்பால் ஏற்கெனவே எடுத்திருக்கும் சில நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர்மீதான சந்தேகம் பலம் பெறுகிறது.

4. தெஹல்காவின் நம்பகத்தன்மை என்னாகும்?

தெஹல்கா, ஒரு காட்டமாக மோடி எதிர்ப்புப் பத்திரிகையாகவே  பரவலாக அறியப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் குஜராத் 2002 சம்பத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து தெஹல்கா மேற்கொண்ட விரிவான புலனாய்வு.  அதனாலேயே இன்றுவரை மோடி ஆதரவாளர்கள் தெஹல்காவின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெஹல்காவைத் தோற்றுவித்த ஒருவர்மீது இப்படியொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதை தெஹல்காவின் வீழ்ச்சியாகச் சித்திரிக்கவே பலர் விரும்புவார்கள்.

2002 குஜராத் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பும்போதெல்லாம் 1984-ஐ நினைவுபடுத்தி பாஜக நழுவுவதை நாம் பார்க்கிறோம். இதே உத்தியைக் கையாண்டு தெஹல்காவிடம் இருந்தும் இனி அவர்களால் நழுவமுடியும். மோடி பற்றி கேள்வி கேட்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று அவர்களால் தெஹல்காவிடம் இனி 'அறச்சீற்றத்துடன்' பதில் கேள்வி எழுப்ப முடியும். ஆனால் ஒரு தவறு இன்னொன்றைச் சரி செய்துவிடாது.

5. இது ஏன் ஓர் அரசியல் சதியாக இருக்கக்கூடாது?

தரவுகள் எதுவும் இன்றி இப்படி யூகிப்பது சரியல்ல. இத்தகைய அனுமானங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையும் குற்றத்தின் தன்மையையும் சிறுமைப்படுத்தவே செய்யும்.

1 comment:

எஸ் சம்பத் said...

தமிழ்பேப்பர் கட்டுரையைவிட இந்த கேள்வி பதில் சிறப்பாக அமைந்திருக்கிறது, தமிழ்பேப்பர் கட்டுரையில் ஒரு எச்சரிக்கை உணர்வும், birds eye view போன்ற மேலெழுந்த பார்வை இருப்பதாக படுகிறது, ஆனால் இந்த கேள்வி பதிலில் நறுக்கென்ற பார்வை, தீர்வு வெளிப்படுகிறது.